வாழ்க்கையில் வெற்றிபெற தேவையான மிக முக்கியமான 5 விஷயங்கள்..

நாம் எல்லோருமே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால் ஏதோ காரணங்களால் அது நடக்காமல் போகிறது.  நீங்கள் பிசினஸ் தொடங்க வேண்டுமா? அப்படியென்றால் நிச்சயமாக உங்கள் பிசினஸ் மூலம் நீங்கள் நிறைய சம்பாதிக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த தொழிலை தொடங்குவீர்கள். பிஸினெஸில் ஜெயிக்க மட்டுமல்ல, நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றாலும், இந்த ஐந்து விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும். கிட்டத்தட்ட தொன்னூறு சதவிகிதம்பேர் பிசினஸில் வெற்றிபெறுவதில்லை. அதற்க்கு காரணங்கள் என்ன? பிசினஸ் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இந்த ஐந்தும் உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்கள். உங்களது லட்சியத்தில் ஜெயிக்க வேண்டும் என்றாலும் கட்டாயமாக நீங்கள் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள், இடம், பழக்கம், கவனம், தியாகம் – இந்த ஐந்தும் மிக மிக அவசியம்.

முதலில் உங்களை சூழ்ந்துள்ள மக்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்களின் பாசிட்டிவ் தாக்கங்கள் உங்களுக்கு நிச்சயமாக வேண்டும். உங்கள் பிசினஸ் நோக்கத்தை சரியாக புரிந்துகொண்டு உங்களை ஊக்குவிக்கும் நண்பர்களோடு தொடர்பில் இருங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு உங்கள் உறவினர்கள் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். உங்களுக்கு உதவி செய்யாவிடிலும் உங்களை எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டிருக்கும் உறவினர்கள் இருந்தால், அவர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது. உங்கள் லட்சியத்தையோ அல்லது பிசினஸ் பற்றியோ அவர்களிடம் சொல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. உங்களின் மேல் உள்ள அக்கறையாலும், அவர்களின் சொந்த அனுபவத்தை மனதில் வைத்துக்கொண்டும், உங்களை முன்னோக்கி செல்ல விடாமல் தடுப்பார்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், உங்களால் முன்னோக்கி செல்வது கடினமாகிவிடும். நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சறுக்கி விழும் தருணம் வரலாம், வரும். அப்பொழுது உங்களுக்கு துணையாகவும், ஆறுதலாகவும், பலமாகவும் உங்களுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உறவுகளோ, நண்பர்களோ உங்களை சுற்றி இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். நிறைய பேர் உங்களுக்காக இப்படி இருக்கவேண்டும் என்று அவசியமில்லை, பாசிட்டிவாக உங்களை அணுகக்கூடிய, உங்களை மேலும் ஊக்குவிக்கக்கூடிய, நீங்கள் விழுந்தால் உங்களை தேற்றக்கூடிய ஒரு சிலர் மட்டுமே உங்களோடு இருந்தாலும் அது போதும். எனவே, நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகொள்ள வேண்டுமென்றால் இப்படியான நல்ல மனிதர்கள் உங்களை சுற்றி இருக்கவேண்டும்.

இரண்டாவது – நீங்கள் தற்போது இருக்கும் இடம். உங்கள் தொழிலுக்கு எந்த இடம் உகந்ததோ அந்த இடத்தை நோக்கி நகருங்கள். உங்கள் இடத்தை மாற்றுங்கள். உங்கள் ஊரை விட்டு, வேறு ஊருக்கோ அல்லது நகரத்திற்கோ சென்று அங்கிருந்துதான் உங்கள் பிசினஸை செய்ய முடியும் என்றால், அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு அந்த இடத்தை நோக்கி நகருங்கள். நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால், நீங்கள் எந்த சூழலில் தற்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்கள் வெற்றி பயணத்திற்கான சூழலை நீங்கள் உருவாக்கி கொள்ளவேண்டும். நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், சோம்பேறியாக இருப்பதற்கும், நீங்கள் தற்போது இருக்கும் இடம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் ஊரை விட்டே நீங்கள் காலிசெய்ய வேண்டுமென்ற அர்த்தமில்லை. ஆனால், தற்போது நீங்கள் இருக்கும் இடத்தை எப்பொழுதும் இல்லாததுபோல், உங்களுக்கு, உங்கள் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் சற்று மாற்றி அமையுங்கள். தேவைப்பட்டால், நீங்கள் வேறு இடத்திற்கே மாறிச்செல்லலாம். எதுவாக இருந்தாலும், நீங்கள் இருக்கும் இடம் உங்களை சுறுசுப்பாக வைத்திருக்க வேண்டும். உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிக்க உதவ வேண்டும். அப்படியான இடத்திற்கு நகருங்கள், அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றி அமையுங்கள்.

பழக்கங்கள் – உங்கள் பழக்கத்தை நீங்கள் மாற்றியமைத்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். யூடியூப், பேஸ்புக் என எப்பொழுதும் போல நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கி கொண்டிருந்தால் உங்கள் லட்சியத்தில் நீங்கள் ஜெயிக்க முடியாது. தினமும் காலையில் நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்? உங்கள் இலட்சியத்தை அடைய நீங்கள் சற்று முன்னரே எழுந்திருக்க பழகிக்கொள்ளவேண்டும். தினமும் எப்பொழுது தூங்க செல்வீர்கள்? தினமும் அதிகாலை எழுதிருக்க வேண்டுமானால், சரியான நேரத்திற்கு உறங்க செல்ல வேண்டும். நீங்கள் தினமும் செய்துகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களை உங்களின் வாழ்க்கை வெற்றிக்காக, உங்கள் பிசினஸ் வெற்றிக்காக நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்க்கையின் திசையையே மாற்றியமைக்கும். உங்கள் நண்பர்களோடு நீங்கள் நிறைய நேரம் செலவழித்திருப்பீர்கள், உங்கள் தோழியோடு, தோழனோடு நீங்கள் செலவழித்த நேரங்களை நீங்கள் உங்கள் பிசினஸில் வெற்றிக்காக, உங்கள் வாழிவின் வெற்றிக்காக செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, உங்களின் சராசரி பழக்கங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இருங்கள்.

நான்காவது – கவனம் – இன்றைய சூழலில், நாம் தினமும் திரும்பும் திசையெங்கும் கவனச்சிதறல்கள். கையில் உள்ள ஸ்மார்ட்போன் போதும் உங்கள் கவனங்களை தினமும் சிதறடிக்க. பேஸ்புக், யூடியூப் என எதை பார்த்தாலும், உங்கள் கவனங்களை தேவையற்ற விஷயங்களில் ஈர்க்க காத்துக்கொண்டிருக்கின்றன. உங்கள் வாழ்க்கையின் தேவைகளை மறந்து, உங்களின் லட்சியத்தில் இருந்து உங்களை திசைதிருப்ப, தினமும் நீங்கள் என்ன பார்க்கவேண்டும், எதை ரசிக்கவேண்டும் என உங்கள் ஸ்மார்ட்போன் உங்களை சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது. பொழுதுபோக்கு, ஆபாசம், கவர்ச்சி, வீடியோ விளையாட்டுகள் என நிறைய அம்சங்கள் உங்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் பிசினஸ் வெற்றியில் இருந்தும், உங்கள் வாழ்க்கையின் லட்சியங்களில் இருந்தும் உங்களை வெகுதூரம் அழைத்துச்செல்கின்றன. இவைகளில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். நீங்கள், உங்கள் தொழிலில், வாழ்வில், லட்சியத்தில் வெற்றிபெற, தினமும் என்னென்ன செய்யவேண்டுமோ அதை செய்து முடியுங்கள். கவனசிதறல்கள், உங்களை கோழையாக்கிவிடும், உங்கள் தன்னம்பிக்கையை போலியாகிவிடும். கனவில் மிதக்கும் மனிதனாக உங்களை மாற்றிவிடும். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் உங்கள் நேரத்தை தினமும் செலவிடுங்கள். உங்கள் சிந்தனையை ஆரோக்கியமாக வைத்திருங்கள். உங்கள் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க, தெளிவான மனமும், சிந்தனையில் கவனமும் மிக மிக அவசியம்.

ஐந்தாவது – தியாகம் – தியாகங்கள் செய்ய நீங்கள் தயாராக இருக்கவேண்டும். வாழ்க்கையில் பலவற்றை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் நண்பர்கள், உங்கள் உறவுகள், உங்கள் பொழுதுபோக்கு, என பலவற்றை நீங்கள் இழக்க நேரிடும். உங்களிடம் எதிர்மறையாக பேசி உங்களை பலவீனமாக ஆக்கும் சிந்தனையுடைய நண்பர்களை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் மேல் நம்பிக்கை இல்லாத சில உறவுகளைவிட்டு நீங்கள் விலகிச்செல்ல நேரிடும். இதனால் வரும் மனவலியை தாங்கும் மனவலிமை உங்களுக்கு இருக்கவேண்டும். இல்லையென்றால், இந்த மனவலிமையை உருவாக்கிக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கவேண்டும். நீங்கள், உங்கள் வாழ்க்கையின் வெற்றிப்பயணத்திற்காக இழக்கும் ஒவ்வொவொரு இழப்பும் உங்களை வலிமையாக்கும். நீங்கள் இழந்தவற்றை ஈடுகட்ட வேண்டுமென்றால், வெற்றியை நோக்கிய பயணத்தில் மனம் தளராமல் முன்னோக்கி செல்லவேண்டும். மனதை தளர விடாதீர்கள். இழப்புகளை நினைத்து சோர்வடையாதீர்கள். நீங்கள் தாங்கும் வலி, உங்களை மேலும் மேலும் பலமாக்கிக்கொண்டே இருக்கும். வாழ்க்கை பயணத்தில், நீங்கள் கடந்து செல்லும் அணைத்து வலியும் உங்கள் வெற்றிக்கு விதையாகவும், உரமாகவும் அமையும். இந்த வலிகளுக்கெல்லாம் மருந்து, நீங்கள் அடையப்போகும் வெற்றிக்கனிதான்.

உங்கள் வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்க முடிவெடுத்துவிட்டால், இவை அனைத்தையும் நீங்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும். பிசினஸில், அல்லது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தொழிலில் வெற்றிகண்டவர்கள் அனைவரும், பலதூரம் பயணித்து வந்தவர்கள். பல தியாகங்களை செய்த்தவர்கள், வலியை தாங்கும் வலிமைகொண்டவர்கள். நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால், இவை அனைத்தையும் உறுதியுடன் மனதில் வைத்து உங்கள் முதல் அடியை எடுத்துவைய்யுங்கள். வாழ்க்கை உங்களை வழிநடத்தும் – வெற்றியை நோக்கி. கொண்ட லட்சியத்தில், கொண்ட நோக்கத்தில் உறுதியாக உள்ளோரை வரவேற்க வெற்றி காத்துக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.