தமிழ்நாட்டு வாழையிலையும், கட்டுச்சாதமும்

எந்த வயதில் இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் மதிய உணவு என்பது கையோடு வீட்டில் இருந்து அம்மாவின் கைமணம், மனைவியின் அன்பில் என்று எப்படியோ ஒரு பிடி சோறு என்றாலும் தன்வீட்டு சோறை சுவைப்பவன் வாழ்வின் அதிர்ஷ்டசாலி.

பொதி சோறு, கட்டுசாதம், பட்டை சோறு என அழைக்கப்படும். பெயர் எதுவென்றால் என்ன? வயிறு நிறைந்தால் போதும். மனிதனின் பேராசை செல்லுபடியாகாத ஒரே இடம் வயிறு தான்.

இன்று போல் பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரங்கள் என செயற்கை ஆக்ரமிக்கும் முன்பு மனிதன் உணவை பத்திரப்படுத்த, பரிமாற என விலங்குகளின் உலர்ந்த தோல், காட்டுத்தாவரங்களின் இலைகள் தான் உபயோகப்படுத்தியிருப்பான். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று வரை நாம் இலைகளை பயன்படுத்தி வருகிறோம்.

Tamil foods on Banana Leaves

வாழை இலை, மந்தார இலை, ஆலிலை, பாக்கு மட்டை என இயற்கையான முறையில் உணவு பரிமாற, எடுத்துப்போக பயன்படுத்துகிறோம். உலர்ந்த மந்தார இலைகளில் சிறு ஈர்க்கங்குச்சி உதவியில் தைத்த இலைகளை பார்ப்பது ஒரு அழகு என்றால் அதில் கட்டிய புளிச்சோறோ, தயிர் சோறோ இலையோடு சேர்ந்து மணக்கும் சோறு தேவாமிர்தம்.

கட்டுச்சோறு ஒவ்வொரு வட்டாரத்திலும் விதவிதமாக சமைக்கப்பட்டாலும், நாஞ்சில் நாடு எனப்படும் குமரி மாவட்டத்தில் அதன் அழகும் சுவையும் வேறு. ஒரு பிடி சோறுக்கு தான் எத்தனை வரலாறு!

முதலில் இலையை நடுதண்டு நீக்கி, தீயில் வாட்டி ஆறியப்பின்பு, டொப்பி எனப்படும் மோட்டா ரக அரிசி சோறு, தேங்காய் துவையல், மாங்காய் ஊறுகாய் துண்டு, ஒரு வறுத்த மீன் என தேங்காயும், மீனும் நிறைந்த கடலோர மாவட்டம் என்பதை விளக்கும் உணவுப்பொதி.

வாழ்க்கைப் பயணத்தில் குடும்பம் எனும் பொதி சுமக்கும் குடும்பத்தினருக்கு, தன் அன்பை உணவில் பொதிந்து அனுப்பும் பெண்ணவளின் இந்த கட்டுச்சோறுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளின் உணவு ஈடாகாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.