வசீகரிக்கும் குரலோசையை கேட்பீர்!

உணர்வினை தெளிவுற வெளிப்படுத்த மொழி தேவை. மொழியின் வெளிப்பாடு ஒருங்கமைந்த ஓசை. அந்த ஓசையினை தான் குரல் என்கிறோம். மனிதன், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் என் வெவ்வேறு உயிர்களின் குரல்களால் நிரம்பியதே புவிமண்டலம்.

மனிதக் குரலை காந்தக் குரல், கம்பீரக்குரல், கீச்சுக்குரல், கரகரப்பான குரல், பிசிறு குரல் பலவாறு வகைப்படுத்தினாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல் போதும். இனிமையான குரலாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நேர்மையும், தன்மானமும் உள்ள குரலாக இல்லாவிடில் தான் அவமானம்.

குரல்வளம் என்று சிந்தித்தாலே திரைப்பாடகர்கள், மேடைப்பேச்சாளர்களின் நினைவு தான் சட்டென்று நினைவுக்கு வரும். நம்மிடையே உலாவும் திரைஇசைக்குரல்களை சிலாகிக்க பக்கங்கள் போதாது ஆனால் அவர்களைப் போலவே பிரபல தனித்துவமான குரல்கள் நம்மை மகிழ்வித்தது, ஆசுவாசப்படுத்தியது, ஆச்சரியப்படுத்தியதுண்டு. அவற்றுள் சில:

எம்.எஸ்.சுப்பலட்சுமி: சுப்ரபாதத்திற்க்கு உருகாதோர் உண்டோ? தெய்வீகம் கமழும் குரலை பற்றிச்சொல்ல வார்த்தைகள் இல்லை. போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷக்குரல்.

சரோஜ் நாராயண் சாமி: வானொலி வழியே புலர்காலைப்பொழுதில் தலைநகரில் இருந்து தவழ்ந்து வந்த வெண்கலக் குரல்.தொண்ணூறுகளுக்கு முன்பு வரை வானொலி கோலோச்சிய காலம் என்பதால் நேற்றைய இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆன குரல்.

எஸ்.என்.சுரேந்தர்: பிண்ணணிக்குரல் கொடுப்பவர் என்றாலும் இவரது குரல் என்றும் முண்ணணியில். நடிகர் மோகனுக்கு இவரது குரல் அத்தனை பாந்தம். நெளியும், குழையும், வளையும் கம்பிப்போன்ற குரல்.

நிழல்கள் ரவி: “கோன் பனேகா க்ரோர்பதி”, நிகழ்ச்சியில் அமிதாப்புக்கு குரல் கொடுத்த சிம்மக்குரலோன். கம்பீரம், அதிகாரம், புத்திச்சாலித்தனம் என்ற எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும்.

பெண்மைகலந்த ஆணின் குரல் “குரல் உடையும்” வயதிற்க்குப்பிறகு வரவேற்பு பெருவதில்லை. அதேசமயம் ஆண்மைகலந்த பெண்ணின் குரல் அதிகாரத்திற்க்கான அடையாளமாகவும், தலைமைப்பண்புக்கு கூடுதல் அங்கீகாரமாவது தான் ஆகச்சிறந்த முரண்.

எத்தன்னை இனிமையான குரல் கேட்கும் வாய்ப்புக்கிடைத்தாலும் நம் வள்ளுவனால் வழங்கப்பட்ட, “குழலினிது யாழினிது என்பார் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்”, குறளை மறுத்துப் பேசுவார் உண்டோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.